பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-01-12 21:24 GMT
சென்னை,

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று இரவு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் மூலம் நேற்று (11-ந் தேதி) ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 301 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இன்று (நேற்று) ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 588 பயணிகள் சென்றுள்ளனர். ஆக மொத்தம் 2 நாட்களில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 889 பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்து திரும்புவதற்கு வசதியாக 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலான 4 நாட்களுக்கு 11 ஆயிரத்து 617 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

11 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் 861 ஆம்னி பஸ்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அபராத தொகையாக ரூ.18 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. வரி வசூல் ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்