பேனர் வைத்தது தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

தடையை மீறி பேனர்கள் வைத்ததாக தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கிற்கு அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-02-06 22:28 GMT
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், ‘அனுமதியின்றி சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு இடையூறாக பொதுஇடங்களில் பேனர்கள் வைக்கப்படுவதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழகம் முழுவதும் பேனர்கள், கட்-அவுட் உள்ளிட்டவைகளை வைக்க இடைக்கால தடைவிதித்து கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 20-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மீறி அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டன. இதுகுறித்து புகார் செய்தும், அவற்றை அதிகாரிகள் அகற்றவில்லை. இந்த அரசியல் கட்சியினர் வேண்டுமென்றே ஐகோர்ட்டு தடை உத்தரவை அவமதித்துள்ளனர். அதிகாரிகளும் ஐகோர்ட்டு உத்தரவை தீவிரமாக அமல்படுத்தவில்லை. எனவே, இவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.நிர்மல்குமார் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் மனோகரன், ‘ஏற்கனவே பேனர் தொடர்பான வழக்கு வருகிற 13-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். வழக்கு விசாரணையை 13-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். மேலும், ‘இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கிற்கு, தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரும், அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், அ.ம.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்