மு.க.ஸ்டாலின் மார்ச் 8-ந் தேதி திருச்சி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

அவதூறு வழக்கில் மு.க.ஸ்டாலின் மார்ச் 8-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-02-13 22:30 GMT
திருச்சி, 

அவதூறு வழக்கில் மு.க.ஸ்டாலின் மார்ச் 8-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.

அரசு அலட்சியம் என அவதூறு

திருச்சி முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் தடுப்பணையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்து தண்ணீருடன் அடித்து செல்லப்பட்டது. தி.மு.க. தலைவரான மு.க.ஸ்டாலின் கொள்ளிடம் தடுப்பணையின் இடிந்த பகுதிகளை 3.9.2018 அன்று நேரில் பார்வையிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக அரசின் அலட்சியத்தால்தான் கொள்ளிடம் அணை உடைந்துள்ளது. எனவே, கொள்ளிடம் அணை உடைப்புக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும். அணைகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்த அரசு அலட்சியம் காட்டி வருகிறது” என்றார். மேலும் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு வந்த வழக்கு

முதல்-அமைச்சர் குறித்தும், அரசு குறித்தும் தரக்குறைவாக மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் அரசு வக்கீல் சம்பத்குமார் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த அவதூறு வழக்கு நேற்று நீதிபதி குமரகுரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் ஓம்பிரகாஷ், ‘மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று இருப்பதன் காரணமாக கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை. மேலும் வழக்கு விசாரணையை சென்னை கோர்ட்டில் நடத்திட அனுமதி வழங்க வேண்டும்’ எனவும் வாதிட்டார். அதற்கு அரசு வக்கீல் சம்பத்குமார் ஆட்சேபம் தெரிவித்தார்.

நேரில் ஆஜராக உத்தரவு

இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (மார்ச்) 8-ந் தேதி திருச்சி கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அதன்பின்னர் வழக்கு விசாரணையை சென்னைக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்