ஜல்லிக்கட்டு போட்டி; தமிழக அரசு விளக்கம் தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ஜல்லிக்கட்டு போட்டிகளை தை மாதம் மட்டுமே நடத்துவது பற்றி தமிழக அரசு விளக்கம் தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2019-02-18 14:06 GMT
மதுரை,

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு என எப்போதுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.  இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காளைகள் கொண்டு வரப்படும்.  இவற்றை பிடிக்க மாடுபிடி வீரர்களும் வருவர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்களும் வழங்கப்படும்.  ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகைக்கு பின்பும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை தை மாதம் மட்டுமே நடத்துவது பற்றி தமிழக அரசு விளக்கம் தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தினால் போலீசாருக்கும், வருவாய்துறையினருக்கும் வேறு பணிகள் இல்லையா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுபற்றி அரசு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  

தமிழக அரசிடம் நாளை மறுநாள் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்