‘தேர்தல் களத்தில் துரோகிகளையும், எதிரிகளையும் வீழ்த்த வேண்டும்’ தொண்டர்களுக்கு டி.டி.வி.தினகரன் கடிதம்

தேர்தல் களத்தில் துரோகிகளையும், எதிரிகளையும் வீழ்த்த வேண்டும் என்று தொண்டர்களுக்கு டி.டி.வி.தினகரன் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2019-03-14 21:10 GMT
சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஓராண்டு நிறைவு

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, நமது இயக்கத்தை அகல்விளக்காக தம் கைகளில் ஏந்தி, எதிரிகளிடம் இருந்து காப்பாற்றினார். ஆனால், உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்த துரோகிகளிடம் நம்முடைய இயக்கமும், தமிழ்நாடும் சிக்கிக்கொண்டன. ஜெயலலிதா மறையவில்லை, அமைப்பாக, ஆன்மாவாக நம்மோடுதான் வாழ்கிறார் என்பதற்குச் சாட்சியாக அவரின் 95 சதவீதத்திற்கும் மேலான தொண்டர்கள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறார்கள்.

தீயசக்திகளையும், துரோகிகளையும் தேர்தல் களத்தில் சந்திக்கப்போகிறோம். மெகா கூட்டணி என்ற பெயரில், ஜெயலலிதா மீது வன்மத்தைக் கக்கியவர்களை எல்லாம் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு துரோகிகள் வருகிறார்கள். ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவதைத் தடுப்பதற்காக வழக்குப் போட்டவர்கள், ஜெயலலிதாவை இழிவாக பேசி சட்டப்பேரவையில் அவர்களது படத்தை வைக்கக்கூடாது என்று சொன்னவர்களுடன் துரோகிகள் கை கோர்த்து இருக்கிறார்கள்.

முக்கியமான கட்டம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வரலாற்றில் புதிய மாற்றத்தை வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் மக்கள் உருவாக்கப்போகிறார்கள். துரோகத்திற்கும், சுயநலத்திற்கும் முடிவுரை எழுதப்போகிறார்கள். இதுவரை இல்லாத புதுக்கணக்குத் தொடங்கப்போகிறது. நம்முடைய லட்சியப் போராட்டத்தின் முக்கியமான கட்டம் இது.

நம் இயக்கத்தோடு சேர்த்து, தமிழ்நாட்டின் உரிமைகளையும் அடகு வைத்திருக்கும் கூட்டத்திடம் இருந்து மீட்டெடுக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவரின் கரங்களிலும் இருக்கிறது. அந்தக் கடமையை மறந்துவிடாதீர்கள். நம்முடைய முழுக்கவனமும் களத்தில் இருக்கட்டும். தேர்தல் களத்தில் தமிழ்நாட்டின் துரோகிகளையும், எதிரிகளையும் வீழ்த்திவிட்டு, ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள் நாங்கள்தான் என்பதை நிரூபிப்போம் என்று சூளுரையோடு இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைப்போம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்