வெப்ப சலனம்: தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2019-05-08 23:15 GMT
சென்னை,

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வந்த நிலையில், கத்திரி வெயிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. கடும் வெயில் காரணமாக அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலுக்கு பயந்து மக்கள் வீடுகளிலேயே முடங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு.

வீசும் அனல் காற்றின் வேகம் உயர வாய்ப்பு இல்லை. அடுத்த 48 மணி நேரம் (இன்றும், நாளையும்) இதே போக்கு தொடரும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனேயே காணப்படும். மாலை நேரத்தில் ஆங்காங்கே குளிர்ந்த காற்று வீசலாம்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் மணப்பூண்டியில் 7 செ.மீ. மழை பெய்திருக்கிறது. மதுரை மாவட்டம் தல்லாகுளம், கரூர் மாவட்டம் மாயனூரில் தலா 6 செ.மீ. மழையும், காஞ்சீபுரத்தில் 5 செ.மீ. மழையும், தர்மபுரியில் 4 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்