வன்முறை நடந்த பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த பரிசீலனை தேர்தல் கமிஷனுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

வன்முறை நடந்த பொன்பரப்பி வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்துவது குறித்து 21-ந்தேதிக்குள் பரிசீலிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-05-16 22:30 GMT
சென்னை,

அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியை சேர்ந்த விஷ்ணுராஜ், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு எங்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் ஓட்டு போடுவார்கள் என்பதால் அதை தடுக்க ஆளும் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதற்காக ஒரு பிரிவினருடன் சேர்ந்து, எங்கள் குடியிருப்பு பகுதியில் வீடுகளுக்கு தீ வைத்தனர். பலரை கொடூரமாக தாக்கினர்.

இதனால், மாலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியில் வர முடியவில்லை. எங்கள் குடியிருப்பு பகுதியில் மொத்தம் 678 வாக்காளர்களில், 403 பேர் மட்டுமே ஓட்டு போட்டுள்ளனர். 275 பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முடியாமல் போனது.

மறுதேர்தல்

எனவே, பொன்பரப்பி வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கடந்த மாதம் 24-ந் தேதி மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் நேரடியாக மனு கொடுத்தேன். ஆனால், தலைமை தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. எனவே, பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். பின்னர், “மனுதாரரின் கோரிக்கையை 21-ந்தேதிக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்