சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் இருந்த 10 புள்ளிமான்கள் களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் இருந்த 10 புள்ளி மான்கள் வனம் போன்ற வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாகனத்தில் 700 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியில் விடப்பட்டது.

Update: 2019-06-22 21:16 GMT
சென்னை,

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகம், ஐ.ஐ.டி. வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500 புள்ளி மான்கள் உள்ளன. இதில் கடந்த 10 ஆண்டுகளில் 50 முதல் 60 மான்கள் மீட்கப்பட்டு காப்புக்காட்டில் சுதந்திரமாக விடப்பட்டு வருகின்றன.

விபத்தினாலும் பிளாஸ்டிக்காலும் மான்களின் உயிர் இழப்பை தடுக்கவும், அதேநேரம் மான்கள் இனப்பெருக்கம் குறைந்துள்ள வனப்பகுதியில் மான்களை கொண்டு விடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள 10 புள்ளி மான்களை நெல்லை மாவட்டம் களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மான்கள் நகரத்துக்குள் வந்து பிளாஸ்டிக் பைகளை உண்டு இறப்பதையும், வாகனங்களில் அடிபட்டு இறப்பதையும் தடுக்கும் விதமாக, புள்ளிமான்களின் இனப்பெருக்கம் குறைந்துள்ள களக்காடு-முண்டந்துறை காப்புக்காட்டில் இடமாற்றம் செய்வது வழக்கம். இது தொடர்பாக வனத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் அதன் அடிப்படையில் வன அலுவலர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த களப்பணியாளர்களைக் கொண்டு முதல் கட்டமாக, கிண்டி சிறுவர் பூங்காவிலிருந்து 10 புள்ளிமான்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 19-ந்தேதி, புள்ளி மான்கள் மரம் மற்றும் செடிகள் வைத்து வனம்போல வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாகனத்தில் மிகுந்த பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்புடன் ஏற்றப்பட்டு பயணத்தை தொடங்கியது. மேலும் வெப்பநிலையினை சீர் செய்ய அந்த வாகனம் வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டது. அந்த சிறப்பு வாகனத்தில் மான்களுக்கு தேவையான தீவனம் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு-முண்டந்துறை காப்புக்காட்டில் 10 புள்ளிமான்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட 10 மான்கள் எவ்வித அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் இல்லாமல் காப்புக்காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக சென்னையிலிருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் மான்கள் இடமாற்றம் செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சவாலான பணியை வெற்றிகரமாக செய்து முடித்த வனத்துறையினரை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாராட்டினார்.

மேலும் செய்திகள்