‘தமிழகத்தில் இனி எப்போதும் மின் வெட்டு இருக்காது’ அமைச்சர் பி.தங்கமணி தகவல்

தமிழகத்தில் இனி எப்போதும் மின் வெட்டு இருக்காது என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

Update: 2019-06-24 21:52 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் உத்தனப்பள்ளி கிராமத்தில் ரூ. 168.07 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆயிரமாவது 230/110 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தின் சோதனை ஓட்டத்தை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் சு.பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழநாடு மின்சார வாரிய இயக்குநர் (பகிர்மானம்) ஹெலன், இயக்குநர் (மின் தொடரமைப்பு கழகம்) டி.செந்தில்வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன், உத்தனப்பள்ளியில் ஆயிரமாவது துணை மின் நிலையமாக 230/110 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தின் சோதனை ஒட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஒட்டம் முடிந்த பின்பு இரு வாரத்திற்குள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். தமிழகத்தில் 114 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் 999- மிக உயர் அழுத்த துணை மின்நிலையங்கள் நிறுவப்பட்டு தற்போது ஆயிரமாவது மிக உயர் அழுத்த துணை நிலையமாக உத்தனப்பள்ளியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இரவு பகல் பாராமல் மின்சாரத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பங்களிப்புதான் முக்கியதுவம் வாய்ந்துள்ளது. தமிழகத்தில் இனி எப்போதும் மின் வெட்டு இருக்காது,

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்