அத்திவரதர் சிலையை குளத்துக்குள் வைப்பது எப்படி? கோவில் பட்டர் விளக்கம்

அத்திவரதர் சிலையை கோவில் குளத்துக்குள் வைப்பது எப்படி? என்பது பற்றி கோவில் பட்டர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2019-08-17 00:00 GMT
சென்னை,

அத்திவரதர் சிலைக்கு இன்று நடைபெறும் நிகழ்வுகள் குறித்து வரதராஜ பெருமாள் கோவில் பட்டர் ஸ்ரீவத்ஷன் நிருபர்களிடம் கூறியதாவது:-

47 நாட்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில் நாளை (இன்று) அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்பட இருக்கிறார். காலை மற்றும் மாலை நித்தியப்படி பூஜை நடக்க இருக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் தைல காப்பு அணிவிக்கப்படும்.

அதாவது பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம், சாதிக் காய், சாம்பிராணி, வெட்டிவேர், சந்தனாதி தைலம் ஆகியவற்றை காய்ச்சி வடிகட்டி அந்த தைலம் அத்திவரதர் சிலை மீது பூசப்படும்.

அத்தி மரத்திலான சிலை என்பதனால் அதை தண்ணீருக்குள் வைக்கும்போது அடுத்த 40 ஆண்டுகள் வலுவாக இருக்க வேண்டும். அறிவியல் ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் பார்த்தோம் என்றால் தண்ணீருக்குள் சிலை இருக்கும்போது அதன் அருகே மீன், பாம்பு போன்றவையெல்லாம் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

அவை சிலை மீது உரசும்போது சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற தைலங்கள் பூசப்படுவதால் மீன், பாம்பு போன்றவை சிலைக்கு அருகே செல்லாது. இன்று மாலை நித்தியப்படி பூஜை முடிந்தபிறகு அத்திவரதருக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்படும்.

இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் சிலை சயன நிலையில் வைக்கப்படும். செங்கல் தரையில்தான் அத்திவரதர் இருப்பார். சிலையின் தலைக்கு அடியில் கருங்கல் இருக்கும். சிலை வைக்கப்படும்போது வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இது அந்தரங்க விஷயம். அதனால் ஒருசில அர்ச்சகர் கள் அனுமதிக்கப்படுவார்கள். கடந்த 1979-ம் ஆண்டு அத்திவரதரை தரிசனம் செய்ய முடியாதவர்கள் இப்போது தரிசனம் செய்து இருக்கிறார்கள். நேரில் வந்து தரிசனம் செய்ய முடியாதவர்கள் தொலைக் காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் பார்த்தனர்.

அடுத்த 40 ஆண்டுகளுமே அவர் நம்முடனேயே இருப்பார். உலகை சுபிட்சமாக வைத்து இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்