காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு 7 அமைச்சர்கள் பங்கேற்பு

காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 7 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Update: 2019-08-17 20:22 GMT
தஞ்சாவூர்,

காவிரி டெல்டா பாசனத்துக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 13-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார். வினாடிக்கு 10,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் நேற்று அதிகாலை கல்லணையை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று காலை 11 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடத்திலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர்.

பின்னர் மதகுகளில் இருந்து சீறிப்பாய்ந்த தண்ணீரில் மலர்கள், விதைநெல்களை தூவி அமைச்சர்கள் வழிபட்டனர். முன்னதாக கல்லணை திறக்கப்படுவதையொட்டி கொள்ளிடத்தின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கல்லணை பூங்காவில் உள்ள ஆதிவிநாயகர் கோவில், கொள்ளிடத்தின் உட்பகுதியில் உள்ள கருப்பண்ணசாமி கோவில் ஆகியவற்றில் மேள, தாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

விவசாயிகள் கோரிக்கை

கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு தலா 1,000 கனஅடியும், கல்லணைக்கால்வாயில் 500 கனஅடியும் என மொத்தம் 3,500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்ததையொட்டி தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் கடலூரில் மொத்தம் 4 லட்சத்து 9 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பா சாகுபடி செய்வதற்கு வசதியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஆறுகளில் திறந்து விடப்படும் தண்ணீரை குளம், ஏரிகளில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்