பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-08-29 05:48 GMT
கோவை 

தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்துள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் கோவை உக்கடம், கரும்புக்கடை, பிலால்நகர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.எஸ். சித்தாந்தத்தை பரப்பியதாகக் கூறி இந்த ஆண்டு மே மாதம் கோயம்புத்தூரில் இருந்து 6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த 6 பேரில், சந்தேகத்திற்கிடமான தலைவரான முகமது அசாருதீன் (32), இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் சூத்திரதாரி ஜஹ்ரான் ஹாஷிமின், பேஸ்புக் நண்பர் மற்றும் ஒய்.ஷீக் ஹிதயதுல்லா ஆகியோரை என்ஐஏ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

உமர் பாரூக், சனாபர் அலி, சமீனா முபின், முகமது யாசீர், சதாம் உசேன் ஆகியோரது வீடுகளில் காலை 5 மணி முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கும் தமிழகத்தில் புகுந்த தீவிரவாதிகளுடன் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்திலும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 

ஏற்கனவே இவர்கள் அனைவரும், இதற்கு முன்னும் மத்திய தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் சிக்கி விசாரணைக்கு ஆளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு கோவை உக்கடம், வின்சென்ட் ரோட்டை சேர்ந்த ஜனாபர் அலி என்பவரது வீட்டில் முதன் முறையாக சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்