விநாயகர் சதுர்த்தி பண்டிகை: தமிழகத்தில் 1¼ லட்சம் விநாயகர் சிலைகள் வழிபாடு இந்து முன்னணி தகவல்

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 1¼ லட்சம் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்படும் என இந்து முன்னணி அமைப்பு தெரிவித்து உள்ளது.

Update: 2019-08-29 22:15 GMT
சென்னை, 

இந்து முன்னணி மாநில அமைப்பாளர் க.பக்தவத்சலம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை இந்து எழுச்சி நாளாக, ஒரு ஒற்றுமை திருவிழாவாக இந்து முன்னணி கொண்டாடி வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை (செப்டம்பர் 2-ந்தேதி) கோலாகலமாக கொண்டாட இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் 1¼ லட்சம் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட இருக்கிறது. சென்னையில் 5 ஆயிரத்து 501 விநாயகர் வைக்கப்பட உள்ளது. வழக்கம்போல வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என 3 பகுதிகளில் இருந்து விநாயகர் ஊர்வலம் தொடங்கி, பட்டினப்பாக்கம் மற்றும் பாலவாக்கம் கடற்கரையில் முடிவடையும். அங்கு விநாயகர் சிலை கரைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமகோபாலன்

இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் கூறுகையில், “இந்துக்களுக்கு பல கடவுள்கள் என்று சொல்வோர் ஏராளம். ஆனாலும் எங்களுக்கு எல்லா கடவுள்களும் ஒன்றுதான். முதலில் தெய்வமே இல்லை என்றனர், பின்னர் தமிழ்க் கடவுள், தெலுங்கு கடவுள் என்று ஏதேதோ சொல்லி சிலர் விமர்சிக்கிறார்கள். இந்த விமர்சனத்தை முறியடித்து மக்களை ஒன்று சேர்க்கவேண்டும் என்றுதான் விநாயகர் சதுர்த்தியை ஒற்றுமை விழாவாக கொண்டாடுகிறோம்”, என்றார்.

பேட்டியின்போது, இந்து முன்னணி மாநில செயலாளர் த.மனோகரன், மாநகர தலைவர் ஏ.டி.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்