சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தனக்கு ஒத்துழைக்க மறுப்பதாக உயர்நீதிமன்றத்தில் பொன்மாணிக்கவேல் புகார்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தனக்கு ஒத்துழைக்க மறுப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் புகார் அளித்துள்ளார்.

Update: 2019-08-30 16:28 GMT
சென்னை,

தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்பட்ட மிகவும் பழமையான சிலைகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெற்றிகரமாக மீட்டு வந்துள்ளனர். இவர் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூலமாக, 1.49 கோடி ரூபாய் விலை மதிப்புள்ள சோழர் காலத்துச் சிலைகள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் 45 வழக்குகளைப் பதிவு செய்து,  47 குற்றவாளிகளை பொன் மாணிக்கவேல் கைது செய்துள்ளார். புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவிலில் 50 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ராஜராஜ சோழன், செம்பியன்மாதேவி சிலைகளை மீட்டுக் கொண்டுவந்த பெருமை இவருக்கு உண்டு.

கலைப்பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி, சிலைக்கடத்தலில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகளைக் கைது செய்த இவரது பணிக்காலம், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. ஆனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இவரது பணியை ஓராண்டுக்கு நீட்டித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்மாணிக்கவேல், சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தனக்கு ஒத்துழைக்க மறுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு முன்னர் பல முறை சிலை கடத்தை தடுப்பு பிரிவினரிடம் இருந்து தனக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என பொன்மாணிக்கவேல் புகார் கூறியிருக்கிறார்.

ஜனவரி முதல் இன்று வரை சிலை கடத்தல் தொடர்பாக ஒருவர் மீதும் வழக்கு பதியவில்லை. வழக்கு ஆவணத்தை கொடுத்தால் சஸ்பெண்ட் என ஆய்வாளர்கள் மிரட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பொன் மாணிக்கவேலின் புகாரை விசாரித்த, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, “நீதிமன்றம் உத்தரவிட்டும் சிலைகடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி குழுவுக்கு அடிப்படை வசதிகளை செய்யாதது ஏன்?” என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்