போக்குவரத்துக்கழக பெண் ஊழியர், கிணற்றில் குதித்து தற்கொலை “3 பெண்கள் அளித்த தொல்லையே சாவுக்கு காரணம்” என பரபரப்பு கடிதம்

போக்குவரத்துக்கழக பெண் ஊழியர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். “3 பெண் ஊழியர்கள் அளித்த தொல்லைதான் சாவுக்கு காரணம்” என அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Update: 2019-09-09 22:14 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள காட்டூரணியை சேர்ந்தவர் நம்புராஜன்(வயது 45). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி ஷோபனா (41). ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழக நகர டெப்போவில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு அபிநயாஸ்ரீ (8) என்ற மகள் உள்ளாள்.

கடந்த சில நாட்களாக ஷோபனா மன உளைச்சலுடன் இருந்து வந்ததார். இந்த நிலையில் நேற்று காலையில் ஷோபனா திடீரென மாயமானார். தாயை தேடிப்பார்த்த சிறுமி அபிநயாஸ்ரீ, பின்னர் அதுகுறித்து ஆர்.காவனூரில் உள்ள தன்னுடைய தாய்மாமா ராமநாதனுக்கும், பாட்டி பழனி அம்மாளுக்கும் தெரிவித்தாள். இதனை தொடர்ந்து ராமநாதன் அங்கு விரைந்து வந்து ஷோபனாவை தேடி பார்த்தார்.

அப்போது, வீட்டில் தலையணைக்கு அடியில் இருந்த ஒரு கடிதம் அவருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தை படித்து பார்த்த ராமநாதனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த கடிதத்தில், “அலுவலகத்தில் வேலை பார்க்கும் 3 பெண்கள் தொடர்ந்து என்னுடன் தகராறில் ஈடுபட்டு பிரச்சினை செய்து வருகின்றனர். எனது இந்த முடிவிற்கு அந்த 3 பேரும்தான் காரணம். இதுபோன்ற பிரச்சினை வருங்காலங்களில் யாருக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். என்னுடைய பர்சில் ஏ.டி.எம். கார்டு உள்ளது. அதில் உள்ள பணத்தை எடுத்து சீட்டு கட்டவும். எனது நகைகள் பீரோவில் உள்ள டப்பாவில் உள்ளன. எனது மகளை நன்றாக பார்த்துக் கொள்ளவும். தயவு செய்து என்னிடம் தகராறு செய்த 3 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது உடல் அருகில் உள்ள கிணற்றில் கிடக்கும். எடுத்துக் கொள்ளவும்” என்று இருந்தது.

உடனடியாக அவர், ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசாரும், உறவினர்களும் ஷோபனாவை தேடினர்.

இந்த நிலையில் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் ஷோபனாவின் உடல் மிதந்தது சற்று நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து உடலை மீட்டனர்.

கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையே விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த ஷோபனாவின் கணவர் நம்புராஜன் நேற்று முன்தினம் இரவுதான் மீண்டும் பணிக்கு செல்வதற்காக சென்னை புறப்பட்டு சென்றார். மனைவி தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்து அவரும் உடனடியாக திரும்பி வந்தார்.

ஆரம்பத்தில் கூட்டுறவு வங்கியில் தற்காலிகமாக வேலைபார்த்து வந்த ஷோபனா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து கழகத்தில் இளநிலை உதவியாளராக பணி கிடைத்து ராமநாதபுரத்தில் சேர்ந்துள்ளார். உடன் வேலை பார்த்த பெண்களின் தொல்லையால் பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டது போக்குவரத்து துறை அதிகாரிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ஷோபனாவுக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடி குறித்து எங்களுக்கு எந்த புகாரும் செய்யவில்லை” என்று கூறினார்.

பணியிடத்தில் தொல்லை அளித்ததாக கடிதத்தில் ஷோபனா தெரிவித்து இருந்த 3 பெண் ஊழியர்களும் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்