தலைமன்னார் - ராமேஸ்வரம்: தூத்துக்குடி - கொழும்பு இடையே விரைவில் படகு போக்குவரத்து இலங்கை மந்திரி தகவல்

தூத்துக்குடி- கொழும்பு, தலைமன்னார் - ராமேஸ்வரம் இடையே படகு போக்குவரத்து சேவை விரைவில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இலங்கை மந்திரி மனோ கணேசன் தெரிவித்தார்.

Update: 2019-09-16 23:15 GMT
சென்னை,

இலங்கையை சேர்ந்த தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சி தலைவரும், அந்நாட்டின் தேசிய ஒருமைப்பாடு, அரசு மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகாரத்துறை மந்திரியுமான மனோ கணேசன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2015-ம் ஆண்டுக்குபிறகு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அரசியல் பயங்கரவாதம் இல்லை. ராணுவ முகாம்களும் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு நலத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இலங்கை-இந்தியாவுடனான நட்பு முக்கியமானது. கொழும்பு துறைமுகத்துக்கு 70 சதவீத வருவாய் இந்தியாவுக்கான சரக்கு பெட்டகங்களை கையாளுவதன் மூலம் கிடைக்கிறது. தூத்துக்குடி - கொழும்பு, தலைமன்னார் - ராமேஸ்வரம் இடையே படகு போக்குவரத்து சேவை தொடங்குவது குறித்து இருநாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இந்த சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது. இலங்கையில் சீனா செலுத்தி வரும் ஆதிக்கத்தை குறைத்து உள்ளோம்.

விமான சேவை

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தி உள்ளோம். இங்கிருந்து இந்தியாவுக்கு விமான சேவை அடுத்த மாதம் தொடங்க இருக்கிறோம். போருக்கு பிறகு தமிழர்களுக்கு 100 சதவீதம் அவர்களுடைய நிலங்கள், உரிமைகள் கிடைத்து விட்டது என்று கூற முடியாது. ஆனால் 2015-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது நல்லமுன்னேற்றம் கிடைத்து உள்ளது.

தற்போது தமிழர்களுக்கு வாழும் உரிமை முழுமையாக கிடைத்துள்ளது. போரின்போது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள். ஆனால் 2015-ம் ஆண்டுக்கு பிறகு எவரும் காணாமல் போகவில்லை. அனைவருக்கும் உரிய உரிமைகள் முறையாக கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்