ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம்

சுஜித்தின் உடல் நடுக்காட்டுப்பட்டி அருகே உள்ள பாத்திமா நகர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2019-10-29 02:59 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், தவறி விழுந்தான். இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அயராத முயற்சியில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வை செய்தனர். 

80 மணி நேரங்களுக்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்ற நிலையில்,   இன்று (அக்.,29) அதிகாலை, சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். சுஜித் நலமுடன் மீட்கப்படுவான் என்று அவரது குடும்பத்தினர் உள்பட தமிழக மக்கள் எதிர்பார்த்த நிலையில், சுஜித் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த நிலையில், மீட்கப்பட்ட சுஜித்தின்  உடலுக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரதேச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

பின்னர், அங்கிருந்து  கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதுர் கல்லறை தோட்டதிற்கு கொண்டு செல்லப்பட்டது.  சுஜித்தின் உடலுக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்குகள் நடைபெற்றது. கல்லறை தோட்டத்தில், வைக்கப்பட்ட சுஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலிக்கு பிறகு, சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்