வீடியோ கேம் தகராறு : பாலிடெக்னிக் மாணவர் துப்பாக்கிச் சூட்டில் பலி -நண்பர்கள் கைது

வண்டலூர் அருகே கல்லூரி மாணவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தில் பலியானார். வீடியோ கேம் விளையாடுவது தொடர்பான பிரச்சினையில் சுடப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-11-05 10:35 GMT
சென்னை 

வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் என்பவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இன்று அவரது பெற்றோர் வேலை விஷயமாக வெளியில் சென்று விட்டனர்.  தனது நண்பர்களான உதயா மற்றும் விஜய் ஆகியோருடன் முகேஷ் குமார் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.  அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர்  ஒடிச்சென்று பார்த்தனர்.

அப்போது, நெற்றியில் குண்டு பாய்ந்த நிலையில் முகேஷ் குமார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முகேஷ் குமாரை அவர்கள் ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி முகேஷ் குமார் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற தாழம்பூர் போலீசார், முகேஷ் குமாரின் நண்பர் உதயாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜய் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.

வீடியோ கேம் விளையாடுவது தொடர்பான மோதலில் முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கக் கூடும் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகேஷை துப்பாக்கியால் சுட்டது யார்? துப்பாக்கி கிடைத்தது எப்படி என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்