குடும்பத்தகராறில் விபரீதம் மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி

ஊத்துக்குளியில் குடும்பத்தகராறில் மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி தற்கொலைக்கு முயன்றதால் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-11-10 23:15 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்தவர் நிசார் அகமது (வயது 32). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஹசீனா (21). இவர்களுக்கு 2 வயதில் அராபத் என்ற மகன் உள்ளான். ஹசீனாவின் தாயார் ரெய்சானாவும் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி மகள் ஹசீனா வீட்டிற்கு சென்று வருவார்.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இடையே கடந்த சில தினங்களாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ரெய்சானா, தனது மகள் ஹசீனா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீ்ட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வீட்டிற்குள் குழந்தை அராபத் அழும் குரல் கேட்டது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை.

கொலை

இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து ரெய்சானா வீட்டிற்குள் சென்றார். அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில் ஹசீனா பிணமாக கிடந்தார். நிசார் அகமதுவும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மயக்கம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். தாய்-தந்தை பக்கத்தில் குழந்தை அழுது கொண்டிருந்தது. இதை பார்த்ததும் ரெய்சானா அதிர்ச்சியடைந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஹசீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நிசார் அகமதுவை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக ஹசீனாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த நிசார் அகமது, தனது கழுத்தையும் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்