குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு எப்போது? டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு எப்போது நடைபெறும்? என்பது குறித்த அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

Update: 2019-12-01 21:30 GMT
சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 பதவிகள் அடங்கிய தொழில் கூட்டுறவு அதிகாரி, வேலை வாய்ப்புத்துறை இளநிலை அதிகாரி, தொழில் உதவி ஆய்வாளர், நகராட்சி ஆணையர், கூட்டுறவு துறை மூத்த ஆய்வாளர் உள்பட 23 துறைகளில் காலியாக உள்ள 1,338 இடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிட்டது.

இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 பேர் எழுதினார்கள். தேர்வு எழுதியவர்களுக்கு முடிவு வெளியானது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடந்தது.

14 ஆயிரத்து 797 தேர்வர்கள் முதன்மை தேர்வு எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவும் வெளியிடப்பட்டது. எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் பதவிகளுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.

அதன் தொடர்ச்சியாக நேர்முகத்தேர்வும் நடைபெற்றது. கடந்த மாதம் 6-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடந்த நேர்முகத்தேர்வில் 2 ஆயிரத்து 667 பேர் பங்கேற்றனர். நேர்முகத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய பட்டியல் www.tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது.

தரவரிசை அடிப்படையில் இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மிகக்குறைவான நாட்களில் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் பட்டியலில் முதல் இடத்தை திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த சுபாஷினி என்பவர் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்