ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-12-03 08:35 GMT
சென்னை,

வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர்  பாலசந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது.  சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால் குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 13 செ.மீ மழை பெய்துள்ளது.  ராமநாதபுரம், கெட்டிகேபாலம் பகுதியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தரங்கம்பாடி, ஆணைக்காரன் சத்திரம், ராமேஸ்வரம், சீர்காழியில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கோத்தகிரி, பரங்கிப்பேட்டை, திருவாடானை, தொண்டியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்