தமிழகம் முழுவதும் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச் சேரியில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2019-12-14 22:00 GMT
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் கேரள எல்லையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, நாமக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சராசரி மழை

கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் தற்போது வரை தமிழகத்தில் சராசரியாக 43 செ.மீ. மழை பெய்து உள்ளது. இன்னும், ஓரிரு நாட்கள் மழை பெய்யும் பட்சத்தில் தமிழகத்தின் இயல்பான சராசரி அளவான 44 செ.மீ. மழையை பெற்றுவிடுவோம்.

குறைவான மழைப்பொழிவு என்று பார்க்கும்போது, புதுவையில் 28 சதவீதமும், பெரம்பலூரில் 24 சதவீதமும், மதுரையில் 23 சதவீதமும், திருவண்ணாமலையில் 21 சதவீதமும், சென்னையில் 13 சதவீதமும் மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மணிமுத்தாறு 6 செ.மீ.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

கடலூர், திருப்பூண்டி (நாகை மாவட்டம்) ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நாகை, மணிமுத்தாறு (நெல்லை), குடவாசல் (திருவாரூர்) ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), பாபநாசம் (தஞ்சாவூர்) ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்