எழும்பூர் ரெயில் நிலையத்தில் நள்ளிரவில் நெகிழ்ச்சி சம்பவம் தனக்குத்தானே பிரசவம் பார்த்த இளம்பெண் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டார்.

Update: 2019-12-14 21:31 GMT
சென்னை,

\நெகிழ்ச்சிகரமான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நிறைமாத கர்ப்பிணி

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அருகே உள்ள பாப்பநாடுபேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி ரம்யா (வயது 25). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் தனது மனைவியுடன் வேலை நிமித்தமாக சென்னை வந்தார். பின்னர் இருவரும் ஆந்திரா செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு எழும்பூர் ரெயில் நிலையம் வந்தனர். அவர்கள் செல்ல வேண்டிய ரெயில் காலையில்தான் புறப்படும் என்பதால், இருவரும் 11-வது நடைமேடையில் தங்கினார்கள்.

நள்ளிரவில் குழந்தை பெற்றார்

அப்போது நள்ளிரவில் ரம்யாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் உதவிக்குகூட யாரும் இல்லை. இதனால் யாருடைய உதவியும் இன்றி, தன்னுடைய பிரசவத்தை ரம்யா, தானே பார்த்துக்கொண்டார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொப்புள் கொடியையும் ரம்யாவே அறுத்துக்கொண்டார்.

ரம்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்ட போது அவரது கணவர் வெங்கடேஷ் தூங்கிக்கொண்டிருந்ததால், அவரை ரம்யா எழுப்பவில்லை. காலையில் வெங்கடேஷ் கண் விழித்து பார்த்த போது, ரம்யாவின் கையில் குழந்தை இருந்ததை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவரிடம், தான் குழந்தை பெற்றெடுத்த விவரத்தை ரம்யா தெரிவித்தார்.

ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்

அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சரோஜ்குமார், இவர்களை பார்த்ததும் அருகில் சென்று விசாரித்தார். உடனே அவர், ரம்யாவுக்கு குழந்தை பிறந்தது குறித்து ரெயில் நிலையத்தில் உள்ள அவசர சிகிச்சை உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து ரம்யாவுக்கும், குழந்தைக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் ரம்யாவையும், குழந்தையையும் ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்