தமிழகம் முழுவதும் 2-வது நாளாக களைகட்டிய ஜல்லிக்கட்டு; 4 பேர் பலி

தமிழகம் முழுவதும் நேற்று 2-வது நாளாக நடந்த ஜல்லிக்கட்டில் 4 பேர் பலியானார்கள்.

Update: 2020-01-17 23:00 GMT
மதுரை, 

தமிழகம் முழுவதும் நேற்று 2-வது நாளாக நடந்த ஜல்லிக்கட்டில் 4 பேர் பலியானார்கள்.

என்ஜினீயர்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றும் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடந்தது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழா நேற்று நடந்து. மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கங்கோட்டையை சேர்ந்த பந்தல் காண்டிராக்டர் வீரபத்திரன் மகன் ஸ்ரீதர் (வயது 27). என்ஜினீயரான இவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தன்னுடைய நண்பர் மருதுபாண்டியின் காளையுடன் சென்றிருந்தார். அங்கு வாடிவாசலுக்கு உள்புறமாக உள்ள இடத்தில் காளையை வரிசையாக அவிழ்த்துவிட வசதியாக 50-க்கும் மேற்பட்ட காளைகளுடன் மாட்டின் உரிமையாளர்கள் வரிசைப்படி காத்திருந்தனர். ஸ்ரீதரும் மருதுபாண்டியின் காளையுடன் நின்றிருந்தார்.

அப்போது திடீரென ஒரு காளை மிரண்டதில் அங்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ஸ்ரீதருக்கு பின்னால் நின்றிருந்த காளை ஒன்று அவரை முட்டியது. இதில் படுகாயம் அடைந்து அவர் அலறியபடி கீழே விழுந்தார். உடனே அங்கு நின்றிருந்தவர்கள் அவரை மீட்டு அலங்காநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஸ்ரீதர் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீதர் என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர் என்றாலும், தற்போது ராமநாதபுரம் சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். இவருடைய நண்பர் மருதுபாண்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு காளைக்கு பயிற்சி அளித்தபோது, காலில் மாடு முட்டியது. இதையடுத்து அவருக்கு துணையாக காளையுடன் ஸ்ரீதர் சென்ற போது தான் பலியானார்.

பார்வையாளர் சாவு

மதுரை மாவட்டம் செக்கானூரணி ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (50). கட்டிட தொழிலாளி. இவர் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்தார். வாடிவாசலில் இருந்து வெளியேறி காளைகள் ஓடிவரும் பகுதியில் ஓரமாக நின்று செல்லப்பாண்டி ஜல்லிக்கட்டு விழாவை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, ஓடிவந்த காளை ஒன்று திடீரென செல்லப்பாண்டியை நோக்கி சீறி வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். செல்லப்பாண்டிக்கு, மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். இந்த சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தியது.

காளையின் உரிமையாளர் பலி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு போட்டி ஆவாரங்காடு, கலிங்கப்பட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய 4 கிராம மக்களின் சார்பில் நேற்று நடைபெற்றது. திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் மொத்தம் 595 காளைகளும், 289 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டின்போது புதுக்கோட்டை மாவட்டம், ராஜகிரி அருகே உள்ள சுக்காம்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி(வயது 55) என்பவருக்கு சொந்தமான காளையும் அவிழ்த்துவிடப்பட்டது. போட்டியில் கலந்து கொண்டு களத்தில் இருந்து வெளியே வந்த காளையை பழனியாண்டி பிடிக்க முயன்றார். அப்போது மற்றொரு காளை அவரை முட்டித்தள்ளியது. இதில் படுகாயமடைந்த அவரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.

செல்பி எடுத்தவர் சாவு

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வேம்பனேரி அய்யனாரப்பன் கோவில் முன்பு நேற்று எருதாட்டம் நடைபெற்றது. இதை காண்பதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். அதில் எடப்பாடி செட்டிமாங்குறிச்சியை அடுத்த மோட்டாங்காட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் உத்தரகுமார் (23) தனது நண்பர்களுடன் எருதாட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் உத்தரகுமார் தனது நண்பர்களுடன் செல்போனில் செல்பியும் எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது துள்ளிக்குதித்து ஓடிவந்த எருது ஒன்று எதிர்பாரதவிதமாக உத்தரகுமாரின் வலது மார்பில் தனது கொம்பால் குத்தியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உத்தரகுமார் பரிதாபமாக இறந்தார்.

தமிழகம் முழுவதும் நேற்று மாடு முட்டி 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்