2021-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

2021-ம் ஆண்டு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-01-22 22:21 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் 2021-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறி இருக்கிறார். பா.ம.க.வால் எழுப்பப்பட்ட இக்கோரிக்கைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது; இது வரவேற்கத்தக்கது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் இந்தியாவில் முழுமையான சமூக நீதியை உறுதி செய்ய முடியாது என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டும் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது.

சட்டசபையில் தீர்மானம்

2021-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கடந்த ஜூலை மாதமே பா.ம.க. வலியுறுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 8-ந் தேதி மராட்டிய சட்டசபையிலும், 11-ந் தேதி ஒடிசா அமைச்சரவை கூட்டத்திலும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரியானா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான கோரிக்கை எழுந்துள்ளது.

எனவே, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும். மராட்டியம், ஒடிசா மாநிலங்களை பின்பற்றி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி தமிழக சட்டசபையில் அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

மேலும் செய்திகள்