பணியிடை நீக்க காலத்தில் ஊழியருக்கு ஜீவன படி வழங்காதது அரசியல் சாசனத்துக்கு எதிரானது - ஐகோர்ட்டு தீர்ப்பு

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் ஊழியருக்கு ஜீவன படியை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2020-02-11 21:45 GMT
சென்னை, 

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள ஜமீன் இளம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளராக பணியாற்றியவர் இளங்கோ. இவர் மீது சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டின் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போது தனக்கு ஜீவன படி வழங்க உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் இளங்கோ வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஜீவன படி வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கத்துக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், ஜமீன் இளம்பள்ளி கூட்டுறவு வங்கித் தலைவர் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது, கூட்டுறவு சங்கச் செயலாளர், ஊழியர் என்ற அந்தஸ்துக்குள் வராததால், அவருக்கு ஜீவன படி வழங்க முடியாது என்று கூட்டுறவு சங்க விதிகளையும், தமிழக அரசின் ஜீவன படி தொடர்பான சட்டப் பிரிவுகளையும் சுட்டிக்காட்டி மேல்முறையீட்டு மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளங்கோ தரப்பு வக்கீல் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:-

‘தமிழக அரசின் சட்டத்தின் கீழும், கூட்டுறவு சங்க விதிகளின் கீழும், செயலாளரை ஊழியராக கருத முடியாது என்று கூறினாலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியரின் ஜீவன படியை வழங்க மறுப்பது, அரசியல் சாசனத்துக்கு எதிரான செயலாகும்.

எனவே, ஜீவன படி கேட்டு இளங்கோ அளித்த மனுவை 6 வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்டோருக்கு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்