மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.23 லட்சம் மோசடி ஆடிட்டர் கைது

மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.23 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற ஆடிட்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-02-12 23:55 GMT
சென்னை,

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 59). இவர் மேட்டூர் மின்சார வாரியத்தில் அதிகாரியாக வேலை செய்து ஓய்வுபெற்று விட்டார். இவர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எனது மகன் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தார். மின்சார வாரியத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து ஓய்வுபெற்ற தேவராஜன் (60) என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் எனது மகனுக்கு மின்சார வாரியத்தில் இளநிலை என்ஜினீயர் வேலை வாங்கிக்கொடுப்பதாக கூறி, ரூ.23 லட்சம் பணம் வாங்கினார்.

ஆனால் வேலை வாங்கி கொடுக்காமல், ரூ.23 லட்சத்தையும் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சிறையில் அடைப்பு

சண்முகம் சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள லாட்ஜில் வைத்துதான் ரூ.23 லட்சம் பணத்தையும் கொடுத்துள்ளார். இதனால் சிந்தாதிரிப்பேட்டை போலீசாரை விசாரணை நடத்த துணை கமிஷனர் தர்மராஜன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் உதவி கமிஷனர் சுப்பிரமணி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், தேவராஜன் சேலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்