7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் தேவையற்ற தாமதம் செய்யக்கூடாது - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் கவர்னர் தேவையற்ற தாமதம் செய்யக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-02-13 20:30 GMT
சென்னை, 

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதனடிப்படையில்தான் 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான பரிந்துரை தீர்மானம் செப்டம்பர் 9-ந்தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கவர்னர் நினைத்திருந்தால் ஒரு வாரத்திலோ அல்லது அதிகபட்சமாக ஒரு மாதத்திலோ முடிவு எடுத்திருக்க முடியும். ஆனால், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 522 நாட்கள் கடந்து விட்ட நிலையில், இன்று வரை அதன் மீது கவர்னர் முடிவெடுக்கவில்லை. அவ்வாறு முடிவெடுக்காமல் இருப்பதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இன்று வரை வெளியிடப்படவில்லை.

இந்த வி‌‌ஷயத்தில் முடிவெடுக்காமல் தாமதிப்பதன் மூலம் கவர்னர் எதையும் சாதிக்க முடியாது. கடந்த காலங்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பலரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் ஜனாதிபதி காலவரையின்றி தாமதம் செய்ததால், அவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. தமிழக கவர்னரின் காலவரையற்ற தாமதமும் அத்தகையதொரு சூழலுக்கு தான் அழைத்துச் செல்லும்.

எனவே, கவர்னர் தேவையற்ற தாமதம் செய்யாமல் அரசியலமைப்புச் சட்டப் படியான அவரது கடமையை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யும்படி கவர்னருக்கு தமிழக அரசு நினைவூட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஜப்பான் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதித்த பயணிகளின் எண்ணிக்கை 150-ஐ தாண்டி விட்டதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் கப்பலில் தமிழகத்தை சேர்ந்த 6 பேரும் தவித்து வருகின்றனர். அவர்களை கப்பல் நிர்வாகம் கவனித்து கொள்கிறது. என்றாலும் கூட, அவர்களையும் பிற இந்தியர்களையும் உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்