அமைச்சருக்கு எதிரான சொத்துகுவிப்பு புகார்: வழக்குப்பதிவு செய்யாமல் எப்படி விரிவான விசாரணை நடத்தப்பட்டது? - லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான சொத்துகுவிப்பு புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல், எப்படி விரிவான விசாரணை நடத்தப்பட்டது? என்று லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2020-02-13 21:45 GMT
சென்னை, 

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 2011-13 காலகட்டத்தில் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 35 ஏக்கர் நிலமும், திருத்தங்கல் பகுதியில் 2 வீட்டு மனைகள் மற்றும் 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார். இவற்றின் சந்தை மதிப்பு ரூ.7 கோடி ஆகும். ஆனால், அவற்றை வெறும் ரூ.1.15 கோடிக்கு வாங்கியுள்ளதாக கணக்கு காட்டியுள்ளார். எனவே முறைகேடாக சொத்துகுவிப்பில் ஈடுபட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு கடந்த ஆண்டு டிசம்பரில் விசாரணை நடத்தினார்.

பின்னர், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டில் இருந்து நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் வக்கீல் மதுரையில் இருந்து வாதம் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான புகார் குறித்து போலீசார் நடத்திய விசாரணை குறித்து விளக்கம் அளித்தார்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஐ.சுப்பிரமணியம், ‘அமைச்சர் முறைகேடாக எந்தவொரு சொத்து குவிப்பிலும் ஈடுபடவில்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு விரிவான விசாரணை நடத்தி, ஆதாரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். எனவே அதன் அடிப்படையில் அந்த அறிக்கையை ஏற்று இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘அமைச்சருக்கு எதிரான ஆரம்பகட்ட விசாரணை என்ற பெயரில் விரிவான முழு விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. பல நூறு பக்கங்கள் கொண்ட அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு மற்றும் இந்த ஐகோர்ட்டு ஆரம்பக்கட்ட விசாரணை என்றால் என்ன? என்று பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. வழக்கே பதிவு செய்யாமல், எப்படி விரிவான விசாரணையை போலீசார் நடத்தினர்?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

பின்னர், ‘இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மாநில தலைமை குற்றவியல் வக்கீலுக்கும், அமைச்சர் தரப்பு வக்கீல்களுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்’.

மேலும் செய்திகள்