நிர்பயா குற்றவாளிகளுக்கு திட்டமிட்டபடி தூக்கு தண்டனை - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

நிர்பயா குற்றவாளிகளுக்கு திட்டமிட்டபடி தூக்கு தண்டனையை நிறைவேற்றவேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

Update: 2020-02-23 08:19 GMT
சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு கொலை செய்த மன்னிக்க முடியாத கொடூரமான குற்றவாளிகள். இவர்களில் வினய் சர்மா சிறைச்சாலையில் உள்ள அறைச்சுவரில் முட்டிக்கொண்டு தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டு தண்டனையிலிருந்து தப்பிக்க மீண்டும் முயற்சி எடுத்துள்ளார். அதுமட்டுமல்ல இவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்றும் அவருக்காக வாதாடும் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இது ஒருபோதும் ஏற்புடையதல்ல.

எனவே மன்னிக்க முடியாத, கொடூரமான, மிருகத்தனமான பாலியல் கொலைக்குற்றம் செய்த 4 குற்றவாளிகளுக்கும் 3-வது முறையாக நீதிமன்றத்தால் குறிக்கப்பட்ட அடுத்த மாதம்(மார்ச்) 3-ந்தேதி கண்டிப்பாக தூக்கு தண்டனையை நிறைவேற்றவேண்டும். எனவே இந்த 4 குற்றவாளிகளுக்கும் எவரும் எந்தவிதமான பரிவும், ஆதரவும் காட்டக்கூடாது. இந்த தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் இனி வரும் காலங்களில் குற்றம் புரிய நினைப்பவர்களுக்கு குற்றம் செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக 3-ந்தேதி அமையவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்