பொது இடத்தில் புகைபிடித்தால் கூடுதல் அபராதம்: மத்திய அரசின் முடிவுக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

பொது இடங்களில் புகைபிடிப்போருக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-02-24 20:30 GMT
சென்னை, 

பொது இடங்களில் புகைபிடிப்போருக்கு விதிக்கப்படும் அபராதத்தை பலமடங்கு உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பொது இடங்களில் புகைபிடிப்பதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும்.

பொது இடங்களில் புகைபிடிப்பதால் பெண்களுக்கும், குழந்தைகளும் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. பொது இடங்களில் பிறர் உள்ளிழுத்து விடும் புகையிலையின் புகையை சுவாசிப்பவர்களுக்கு இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் 40 சதவீதம் அதிகமாக உள்ளன. பொதுவெளியில் விடப்படும் புகையில் 7 ஆயிரம் வேதிப்பொருட்கள் உள்ளன. இவற்றில் 69 வேதிப்பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை ஆகும். பொது இடங்களில் விடப்படும் புகையை சுவாசித்தால் நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கணையப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல வகையான புற்றுநோய்களும், ஆஸ்துமா, நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

பிறர் இழுத்துவிடும் புகையை சுவாசிப்பதால் மட்டும் உலகம் முழுவதும் 6 லட்சம் பேர் இறக்கின்றனர். அவர்களில் 1.30 லட்சம் பேர் இந்தியர்கள். பொது இடங்களில் புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் நிலையில், அதை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். பொது இடங்களில் புகைபிடிப்போருக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் மத்திய அரசு முடிவு செயல் வடிவம் பெற்றால் அது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பெரும் நன்மையாகவும், நிம்மதியாகவும் அமையும்.

எனவே, மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் முடிவை அறிவிக்க வேண்டும். இந்த முடிவை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் மிகத்தீவிரமாக செயல்படுத்தி பெண்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்