வாகன சோதனையின் போது போலீசார் தாக்கிய டிரைவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு

வாகன சோதனையின் போது போலீசார் தாக்கிய டிரைவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-03-06 23:15 GMT
சென்னை, 

சென்னை சாலிகிராமம் வேலாயுதம் காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ். டிரைவர். இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2.4.2018 அன்று நான் எனது தாயார் சங்கீதா, சகோதரி ரேவதி ஆகியோருடன் தியாகராயநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அப்போது மாம்பலம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், சுயம்புலிங்கம், ஜெயராமன் ஆகியோர் மோட்டார்சைக்கிளை வழிமறித்து, என்னை அவதூறாக பேசி தாக்க முயன்றனர். 

இதை தடுக்க முயன்ற எனது தாயாரை கீழே தள்ளியதில், அவர், சாலையில் மயங்கி விழுந்தார். தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் உள்பட 3 பேரும் என்னை தாக்கினர். இதன்பின்பு, என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பொய் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தாக்கியதில் பாதிக்கப்பட்ட எனது தாயார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். எனவே, போலீஸ் அதிகாரிகள் 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், ‘மனித உரிமை, சட்ட உரிமையை பாதுகாக்க வேண்டிய கடமை போலீஸ் அதிகாரிகளுக்கு உள்ளது. போலீஸ் அதிகாரி சுரேஷ் உள்பட 3 பேரும் சட்டப்படி செயல்படாமல் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்படுகிறது. இந்த தொகையை 3 போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தமிழக அரசு மனுதாரருக்கு வழங்க வேண்டும். 

போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின் போது கடுமையான முறையில் நடந்து கொள்வதை தடுக்கவும், சட்டப்படி செயல்படவும் உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்