கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டசபையை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை - துரைமுருகனுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

கொரோனாவை தடுக்க சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், சட்டசபையை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் துரைமுருகனுக்கு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2020-03-17 22:45 GMT
சென்னை, 

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா நோய் தொடர்பாக அரசு அறிவித்துள்ள வருமுன் காப்போம் நடவடிக்கைகளை நான் உள்ளபடியே வரவேற்கிறேன். அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, அனைத்து நிகழ்ச்சிகளும் 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நோய் அறிகுறி பற்றி கண்டறியும் ஆய்வகங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கும் கிங் நிறுவன ஆய்வகம் பரிசோதனை செய்ய வேண்டும். தனியார் ஆய்வகங்களும் இந்த ஆய்வை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு அது பயன்படக்கூடிய வகையில் அதற்குரிய கட்டணத்தை, நீங்களே நிர்ணயிக்க வேண்டும்.

விமான நிலையங்களுக்கு அருகிலேயே, நோய்க்கு உள்ளானவர்களைத் தனிமைப்படுத்தி, தங்க வைக்கக்கூடிய மையங்களை அனைத்து மருத்துவ வசதிகளுடனும் உருவாக்கிட வேண்டும்.

மக்கள் நடமாட்டம் இல்லாத புறநகர் பகுதியிலும், ஒவ்வொரு மாவட்ட தலைநகர் மருத்துவமனைக்கு அருகிலும் இடத்தை தேர்வு செய்து, மருத்துவ வசதிகள் அடங்கிய தனிமைப்படுத்தும் மையங்களைப் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தித்தர வேண்டும்.

அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் எல்லோரும் வீட்டில் இருந்தே பணிபுரியக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். இத்தாலி போன்ற நாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஆகவே கொரோனா வேகமாக பரவக்கூடிய நெருக்கடி ஏற்பட்டால், அதைச் சமாளிக்க அரசு தயாராக இருக்க வேண்டும்.

அதேபோல் தனியார் மருத்துவமனை உரிமையாளர்களை அழைத்து, அரசு அவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். பாதிப்படைந்தவர்கள் விவரம் குறித்து வெளிப்படையாக இந்த அரசு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும்போது, கொரோனா வேகமாக பரவி வருகிறது. எங்கள் பகுதியில் சீனாவில் இருந்து வந்திருந்த வாலிபர் என்னை சந்தித்து பேசினார். நான் அவரை வீட்டிற்கு செல்லுங்கள் என்று சொன்னேன். (இவ்வாறு அவர் குறிப்பிட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது)

கே.ஆர்.ராமசாமி:- இல்லை, நான் உண்மையை தான் சொன்னேன். இந்த அளவுக்கு நமக்கு பயம் இருக்கிறது. இவ்வளவு பிரச்சினை இருக்கிறது? இந்த பிரச்சினையிலும் சட்டசபை கூட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டுமா?. எதிரே அமர்ந்திருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் கூட அடிக்கடி கையில் ஸ்பீரே அடிக்கிறார். (இவ்வாறு அவர் பேசியதும், உறுப்பினர்கள் சிரித்தனர்).

அமைச்சர் விஜயபாஸ்கர்:- கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. அரசு எல்லாவற்றையும் வெளிப்படையாக தான் கூறி வருகிறது. பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

ரூ.28 லட்சத்தில் கூடுதலாக முககவசம் வரவழைக்கப்பட்டுள்ளது. 2,221 பேர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே யாரும் பயப்பட வேண்டாம்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்:- நீங்கள் பயப்பட வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறதே?. குளித்து விட்டு தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் சட்டசபையை தொடர்ந்து நடத்த வேண்டுமா?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- கொரோனா வைரஸ் பற்றி இங்கே சொன்னார்கள். எதிர்க்கட்சி தலைவரும் இதைப் பற்றி தெரிவித்தார். அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ்நாட்டில் ஒருவர் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட 8 கோடி பேர் தமிழகத்தில் இருக்கின்றோம். இன்னும் சொல்லப்போனால், அனைவருமே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். நானும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்திருக்கின்றேன். நோய் வருவது இயற்கை. அதை யாராலும் தடுக்க முடியாது.

இதில் அச்சப்பட வேண்டிய தேவையே இல்லை. சட்டசபை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அனைத்து உறுப்பினர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்படும், உங்களுக்கு பரிசோதனை வேண்டுமென்றால், உங்களை பரிசோதிப்பதற்கும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் அரசு தயாராக இருக்கின்றது. அதுமட்டுமல்ல, சட்ட சபைக்கு உள்ளே வருகின்ற போது கூட, அனைவரையும் பரிசோதனை செய்து தான் அனுப்புகிறார்கள்.

கொரோனா வைரஸ் நோய் குறித்து மத்திய அரசால் அளிக்கப்படும் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பரிசீலித்து, அரசால் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோய் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க, அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்ட சிறப்பு பணிக்குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த குழுவில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர், காவல் துறை தலைமை இயக்குனர், தென்னக ரெயில்வே பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், வல்லுனர் குழுவினரும் இடம்பெற்று உள்ளனர்.

இச்சிறப்பு பணிக்குழு, அவ்வப்போது சந்தித்து, அரசு வழங்கும் உத்தரவுகளை சரியான முறையில் அமல்படுத்தப்படுகின்றதா என்பதை தீவிரமாக கண்காணித்து, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தமிழ்நாட்டில் முழுமையாக தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை இந்த அவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்