பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் “மக்கள் ஊரடங்கு” கடைபிடிப்பு

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் ஊரடங்கு தொடங்கியது.

Update: 2020-03-22 01:44 GMT
புதுடெல்லி,

சீனாவில் உருவாகி இன்று உலகையே முடக்கிபோட்டு இருக்கும் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் ‘மக்கள் பொது ஊரடங்கு’ பிறப்பிக்கப்படுவதாகவும் மக்கள் காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கேட்டுக்கொண்டார்.

மேலும் சேவை செய்யும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள பாராட்டும் விதமாக பொது மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து மாலை 5 மணிக்கு கைதட்டி பாராட்ட வேண்டும் எனவும் பிரதமர் வேண்டுகோள்விடுத்தார்.

பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் மால்கள், சினிமா அரங்குகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், சிறிய, பெரிய கடைகள் ரெயில், பஸ், விமான போக்குவரத்துகள் இன்று இயங்கவில்லை.

மக்கள் ஊரடங்கையொட்டி இன்று (ஞாயிறு) நாடு முழுவதும் 3,700 ரெயில்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. டெல்லி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இயங்கும் மெட்ரோ ரெயில்கள், நாடு முழுவதும் 2,400 பயணிகள் ரெயில்கள் மற்றும் 1,300 மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவிப்பை ஏற்று தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அரசு பஸ்கள் ஓடாது என அறிவித்து உள்ளது. ஆம்னி பஸ்கள், மெட்ரோ ரெயில்கள், நீண்டதூர ரெயில்கள் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது.

கோயம்பேடு மொத்த மார்க்கெட்டும் இன்று அடைக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. சென்னையில் மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் உள்பட கடற்கரைகள் அடைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு தலங்களும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆட்டோக்கள் மற்றும் லாரிகள் ஓடவில்லை. கால் டாக்சிகளும் ஓடவில்லை.

மக்கள் ஊரடங்கையொட்டி இன்று 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடைகள், ரெயில் நிலையங்கள் அடைக்கப்படுவதால் ரோந்து பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் வீதிகளில் கூட்டமாக வந்தால் அவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் செய்திகள்