தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18 ஆக உயர்வு - ஊரடங்கை கடுமையாக பின்பற்றுமாறு விஜயபாஸ்கர் வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது, 119 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2020-03-25 00:15 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. விமான நிலையங்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 163 பேருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. 15,298 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த நாடுகளில் இருந்துவந்த 43 பயணிகள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதுவரை 743 பேருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் 608 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. 120 பேருக்கு முடிவுகள் இன்னும் வரவில்லை. தமிழகத்தில் நேற்று முன்தினம் 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 12 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கலிபோர்னியாவில் இருந்து வந்த போரூரை சேர்ந்த 74 வயது நபருக்கும், லண்டன் மற்றும் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த 52 வயது பெண்ணுக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த கீழ்க்கட்டளையை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கும், நியூசிலாந்தில் இருந்து வந்த 65 வயது நபருக்கும், சைதாப்பேட்டையை சேர்ந்த 55 வயது பெண், லண்டனில் இருந்து வந்த 25 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதில் கலிபோர்னியாவில் இருந்து வந்தவரும், அமெரிக்கா, லண்டனில் இருந்து வந்த பெண்ணும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியிலும், கீழ்க்கட்டளை மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த பெண்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும், 25 வயது வாலிபர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும், 65 வயது நபர் தனியார் ஆஸ்பத்திரியிலும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இதுவரை ஆஸ்பத்திரிகளில் 119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேவையில்லாமல் முகக்கவசம் அணிய வேண்டியது இல்லை. தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடியும் 21 நாட்கள் முழு ஊரடங்கை நாடு முழுவதும் அறிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக இதுபோன்ற அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இத்தாலி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட நாடுகளில் 3-வது மற்றும் 4-வது 15 நாட்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 முதல் 20 மடங்கு வரையிலும் உயர்ந்திருக்கிறது. இந்தநிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு மிக கவனமாக இருக்கிறது. முழு ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கடுமையாக பின்பற்றவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்