ஊரடங்கை மீறி ஊர் சுற்றியதாக தமிழகம் முழுவதும் 2.30 லட்சம் பேர் கைது - அபராத வசூல் தொகை ரூ.1 கோடியை தாண்டியது

ஊரடங்கை மீறி ஊர் சுற்றியதாக தமிழகம் முழுவதும் இதுவரையில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 823 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத வசூல் தொகை ரூ.1 கோடியை தாண்டியது.

Update: 2020-04-18 21:45 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஏப்ரல் 14-ந்தேதி வரையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. கொரோனாவின் வீரியம் குறையாததால் ஊரடங்கு உத்தரவு வருகிற மே 3-ந்தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தினாலும், ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் தேவையின்றி ஊர் சுற்றுபவர்கள் சுற்றி கொண்டு தான் இருக்கிறார்கள்.

எனவே போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு, ‘யார் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருகிறார்கள்?. தேவையின்றி யார் வருகிறார்கள்? என்பதை கண்காணித்து வருகிறார்கள். தேவையின்றி சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

அந்த வகையில் ஊரடங்கிற்கு அடங்காமல் ஊர் சுற்றியதாக தமிழகம் முழுவதும் இதுவரையில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 823 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவர்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.1 கோடியே 6 லட்சத்து 74 ஆயிரத்து 294 வசூல் செய்யப்பட்டு உள்ளது. நேற்றிரவு நிலவரப்படி கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியதாக டி.ஜி.பி. அலுவலக போலீசார் தெரிவித்தனர்.

சென்னையில் மட்டும் நேற்று 1,008 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 622 மோட்டார் சைக்கிள்கள், 69 ஆட்டோக்கள், 16 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 707 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களால் போலீஸ் நிலையங்கள் வாகன ‘பார்க்கிங்’ நிறுத்துமிடம் போன்றும், மோட்டார் சைக்கிள் ‘ஷோரூம்’ போன்று காட்சி அளிக்கிறது. அந்த வாகனங்களை சங்கிலியால் பூட்டி போலீசார் பாதுகாத்து வருகின்றனர். இது போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்