ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பு: கீழடி அகழாய்வு பணிக்காலம் இந்தாண்டு இறுதி வரை நீட்டிக்கப்படுமா? தொல்லியல் அதிகாரி விளக்கம்

கீழடி மற்றும் அதன் சுற்றியுள்ள ஊர்களில் நடைபெறும் அகழாய்வு பணிக்காலம் இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படுமா? என்பது தொடர்பாக தமிழக தொல்லியல் துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.

Update: 2020-05-23 21:11 GMT
திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் நடைபெறும் அகழாய்வு பணிகளை மாநில தொல்லியல்துறை துணை இயக்குனர் சிவானந்தம் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய 4 இடங்களிலும் சேர்த்துத்தான் இப்பகுதி தொல்லியல்மேடு என்று அழைக்கப்படுகிறது. இதில் கீழடி பகுதி தொழிற்சாலை நிறைந்ததாகவும், கொந்தகை பகுதியில் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியாகவும், அகரம் மற்றும் மணலூர் பகுதி பழங்காலத்தில் மக்கள் வசித்த இடமாகவும் இருந்துள்ளது.

2,600 ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரிக வசிப்பிடமாக இந்த பகுதி விளங்கியது. தற்போது மணலூரில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 10-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி நடக்க உள்ளது. கீழடி உள்ளிட்ட 4 ஊர்களிலும் அகழாய்வு பணிகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் வரை மட்டும்தான் அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அதற்கு பின்னர் மழைக்காலம் தொடங்குவதால் பணிகள் நடைபெற சிரமமாக இருக்கும். ஊரடங்கு காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், இந்த பணிகள் இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்க வாய்ப்பு இல்லை.

ஒருவேளை அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள அகழாய்வு பணியுடன், இந்தாண்டு மீதம் இருக்கும் பணிகள் சேர்க்கப்படலாம். கொந்தகையில் இன்னும் சில நாட்களில் பணிகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்