சென்னையில் தொழிற்பேட்டை இயங்க வழிகாட்டு நெறிமுறைகள்; தமிழக அரசு வெளியீடு

சென்னையில் தொழிற்பேட்டை இயங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

Update: 2020-05-24 06:43 GMT
சென்னை,

தமிழகத்தில் சென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்புகள் உறுதியாகி உள்ளன.  இதனால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், சென்னையில் தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழக முதல் அமைச்சர் பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுபற்றி பரிசீலனை செய்து, சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.  இதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.  இவற்றில், 25 சதவீதம் அளவிலான பணியாளர்களை கொண்டு தொழிற்பேட்டைகளை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.  பணிக்கு செல்லும் தொழிலாளர்களின் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

தொழிலாளர்கள் பணிக்கு செல்லும் முன் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.  தனிநபர் இடைவெளியுடன் பணிபுரிய வேண்டும்.  கிருமி நாசினிகள் தெளித்து பணியாற்றும் இடங்களை தூய்மைப்படுத்த வேண்டும்.  55 வயது மேல் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு வராமல் தவிர்க்கப்படல் வேண்டும்.

கழிவறைகளை 2 மணிநேரத்திற்கு ஒரு முறை கிருமி நாசினிகள் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் என்பன போன்ற விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்