காவல்துறையினர், சிறைத்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள்-ஐகோர்ட்டில் அரசு தகவல்

காவல்துறையினர், சிறைத்துறையினர் மற்றும் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்‘ என்றும் அரசு வக்கீல் கோரிக்கை விடுத்தார்.

Update: 2020-06-26 23:45 GMT
சென்னை, \

சென்னை ஐகோர்ட்டில் வாராகி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதேபோல சிறைத்துறையிலும் போதிய நோய் தடுப்பு வசதிகள் இல்லை. இதனால் பாதிப்புக்குள்ளாகும் காவல்துறை மற்றும் சிறைத்துறையினரின் எண்ணிக்கை நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. 

கைதிகள் மத்தியிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் உள்ளது. சென்னை புழல் சிறையில் இருந்து மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட 19 கைதிகளில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் புழல் சிறையில் எஞ்சியுள்ள கைதிகளுக்கு இதுவரை பரிசோதனை செய்யப்படவில்லை. எனவே காவல்துறையினர், சிறைத்துறையினர் மற்றும் கைதிகளுக்கு முழுமையான பரிசோதனை நடத்தி கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். அத்துடன் அவர்களுக்கு முழு உடல் கவசம், கையுறை, கிருமிநாசினி போன்றவற்றை தட்டுப்பாடின்றி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘காவல்துறையினர், சிறைத்துறையினர் மற்றும் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்‘ என்றும் அரசு வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்