ஜெயில் சூப்பிரண்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு: முருகன் உண்ணாவிரதம் வாபஸ்

வேலூர் மத்திய ஜெயிலில் 27 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன் ஜெயில் சூப்பிரண்டு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.

Update: 2020-06-27 21:38 GMT
வேலூர், 

வேலூர் மத்திய ஜெயிலில் 27 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன் ஜெயில் சூப்பிரண்டு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.

வீடியோ காலில் பேச அனுமதி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு முன்எச்சரிக்கையாக ஜெயில் கைதிகளை அவரது குடும்பத்தினர் சந்திக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக அவர்கள் செல்போன் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசி வருகிறார்கள். மற்ற கைதிகளை போன்று முருகன் தனது மனைவி நளினி, குடும்பத்தினர், உறவினர்களிடம் வீடியோ காலில் பேச அனுமதிக்கும்படி ஜெயில் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

அதனால் மனவேதனை அடைந்த முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந் தேதி முதல் ஜெயில் அறையில் உண்ணாவிரதம் இருந்தார். சிறைத்துறை சார்பில் வழங்கப்பட்ட உணவுகளை தவிர்த்தார். யாருடனும் பேசாமல் தியான நிலையில் காணப்பட்ட அவரின் உடல்நிலையை ஜெயில் வளாக டாக்டர்கள் தினமும் கண்காணித்து வந்தனர். ஜெயில் அதிகாரிகள் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரிக்கை வைத்தும் அவர் அதனை ஏற்கவில்லை. தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் உடல் எடை 5 கிலோ வரை குறைந்தது. முருகனுக்கு உடல்சோர்வு ஏற்படும்போது குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்தது.

உண்ணாவிரதம் வாபஸ்

இந்த நிலையில் 27-வது நாளாக நேற்று முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவரிடம் மாலை 4 மணியளவில் ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாள் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கூறினார். அதற்கு முருகன், ஜெயில் வளாகத்தில் உள்ள கோவிலுக்கு தினமும் செல்ல அனுமதிக்க வேண்டும். ஜெயில் வங்கி கணக்கு பணத்தில் பொருட்கள் வாங்கி தர வேண்டும். தான் கேட்கும் புத்தகங்கள் மற்றும் தனது அறையில் தொலைகாட்சி வேண்டும், மனைவி நளினியிடம் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதற்கு சூப்பிரண்டு, நளினியிடம் செல்போனில் பேசுவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அதனை நிறைவேற்ற முடியாது. மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முருகன் 4.30 மணியளவில் இளநீர் குடித்து உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.

மேலும் செய்திகள்