கோவையில் தயாரிக்கப்படும் தங்க, வெள்ளி முகக் கவசங்கள்

கோவையை சேர்ந்த தங்க நகை தயாரிப்பாளர் ஒருவர் தங்கம் மற்றும் வெள்ளியில் பயன்படுத்துவதற்கு எளிய வகையில் முக கவசங்கள் தயாராரித்து வருகின்றார்.

Update: 2020-07-15 01:21 GMT
கோவை

கொரொனொ  பெருந்தொற்று அனைத்து தரப்பு மக்களையும்  முககவசம் அணிய வைத்துள்ளது. முக கவசம் அணியாதவர்களை பார்த்து மற்றவர்கள் அச்சப்படும்  சூழலும் நிலவி வருகின்றது.

இந்நிலையில் சாதாரண துணி  மாஸ்க் முதல் மருத்துவர்கள் பயன்படுத்தும் என் 95 மாஸ்க் வரை அனைத்து விதமான முககவசங்களும்  அதிக அளவில்  விற்பனையாகி வருகின்றது.

இந்நிலையில் கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற நகைபட்டறை  உரிமையாளர்  தங்கம் மற்றும் வெள்ளியில் எளிமையாக பயன்படுத்தும் வகையில் தங்கம்  மற்றும் வெள்ளியில் முககவசங்களை  தயாரித்து வருகின்றார்.

தங்கம் மற்றும்  வெள்ளியை மெல்லிய கம்பியாக மாற்றி,  அந்த மெல்லி கம்பியின் மூலம் முககவசம்  வடிவமைக்கப்படுகின்றது. முதலில் பரிசோதனை அடிப்படையில் தங்கம் மற்றும்  வெள்ளியில் முககவசம்  தயாரித்ததாகவும்  இப்போது ஆர்டர்  கிடைத்து இருப்பதாகவும் தெரிவிக்கும் ராதாகிருஷ்ணன், தங்கம் மற்றும் வெள்ளியை 0.06 மி.மீட்டர் மெல்லிய கம்பியாக மாற்றி முககவசம் செய்வதாகவும், மக்கள்  இவற்றை விரும்புவதால் இதில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

தற்போது சந்தையில் இருக்கும் கவசங்கள் கப் போல இருக்கும் எனவும், ஆனால் இங்கு மெல்லிய நூல் போன்ற  கம்பியால்  தயாரிக்கப்படுவதால் துணி முகக் கவசம் போலவே இருக்கும் எனவும் தெரிவித்தார். திருமணத்திற்கு இந்த வகையான தங்கம் மற்றும் வெள்ளி முக கவசங்கள் 'ரிச்சான' லுக்கை கொடுக்கும் எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.சிங்கிள் லேயர் முதல் நான்கு லேயர் வரை தேவைக்கு ஏற்ப இந்த முக கவசத்தை வடிவமைத்து கொள்ள முடியும் எனவும், 18 கேரட் 45 கிராம் தங்கத்திலும்,  22 கேரட்  52 கிராம் தங்கத்தில் இந்த முக கவசம் செய்ய முடியும் எனவும், 22 கேரட் தங்கத்தில் முக கவசம் செய்வது மிக மென்மையாக இருக்கும் எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதே போல் 15 கிராமில் வெள்ளியில் முக கவசம் செய்ய முடியும் எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இந்த முக கவசம்  செய்ததாகவும்,மிகவும்  கவனத்துடன் பொறுமையாக இந்த முக கவசத்தை செய்ய வேண்டி இருப்பதாகவும் குடும்ப நபர்களுடன் இணைந்து  மட்டுமே இந்த முக கவசம்  செய்வதாவும், ஆடம்பரமாக இருப்பவர்களுக்கு இந்த முககவசம் பயன்படும் என தெரிவித்தார்.

மேலும், தங்கத்தில்  தயாரிக்கப்படும் முக கவசத்தின் விலை ரூ.2.75 லட்சம் வரை இருக்கும் எனவும்,  வெள்ளியில் தயாரிக்கப்படும் முக கவசத்தின் விலை ரூ. 15 ஆயிரம் வரை இருக்கும் எனவும் தங்க நகை வடிவமைப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்