ஜெயலலிதா நினைவு இல்லம்: சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட்

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக நீதிமன்றத்தில் 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது.

Update: 2020-07-25 03:09 GMT
சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கப்படும் என்று கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.

இதனிடையே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, போயஸ் கார்டன் மற்றும் கஸ்தூரி எஸ்டேட் பகுதி வீட்டு உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணையில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது.

முன்னதாக, ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக தொடர்பான வழக்கு விசாரணையில் தீர்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதா போயஸ் தோட்டம் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்ததுடன், முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்ற கூடாது எனவும் கேள்வி எழுப்பியது.

இதனிடையே வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும்  அரசு நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில்  ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டு தொகையை தமிழக அரசு செலுத்தி உள்ளது. ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியை செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்