தமிழ்நாட்டில் ஆர்டர்லி முறை இல்லை - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

தமிழ்நாட்டில் ஆர்டர்லி முறையே இல்லை என்று ஐகோர்ட்டில் அரசு தலைமை குற்றவியல் வக்கீல் கூறினார்.;

Update:2025-12-19 06:57 IST

சென்னை,

தமிழ்நாட்டில் ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என கடந்த 2022-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, டி.ஜி.பி.யின் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், “போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக போலீஸ்காரர்கள் யாரும் பணியாற்றவில்லை.

இதுகுறித்து பதவியில் இருக்கும் உயர் போலீஸ் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்” என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், “ஒரு ஆர்டர்லி கூட பணியில் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வக்கீல், “தற்போது ஒரு போலீஸ்காரர் கூட ஆர்டர்லியாக பணியில் இல்லை. அவ்வாறு இருப்பதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து, “சிறைத்துறையில் முன்பு இருந்த ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டது. அதுபோல, போலீஸ் துறையிலும் ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். ஆர்டர்லி முறையை பின்பற்றுவதே குற்றம் ஆகும். அதேநேரம், பணியில் இருப்பதாக கணக்கு காட்டிவிட்டு, தனிப்பட்ட வேலைகளில் ஈடுபடும் போலீஸ்காரர்களை கண்காணிக்க பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன உள்ளது? என்பது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்” என்று கூறி வழக்கை தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்