அதிகரிக்கும் குழந்தைகள் கடத்தல்.. தமிழகத்தை மிரட்டும் கடத்தல் ராணிகள்: பெற்றோர்களே உஷார்..
பெண் குழந்தைகள் என்றால் ரூ.4 லட்சத்திற்கும், ஆண் குழந்தைகள் என்றால் ரூ.5 லட்சத்திற்கும் விலை பேசி விற்கிறார்கள்.;
சென்னை,
குழந்தைகள் கடத்தல் கும்பல் மீது தமிழக போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்திய அளவில் தொடர்புடைய இந்த கடத்தல் கும்பலில் 60-க்கும் மேற்பட்ட நபர்கள் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு நெட்வொர்க்காக செயல்படுகிறார்கள். பெரும்பாலும் வெளிமாநிலங்களில் குறிப்பாக ஆமதாபாத், மும்பை, புனே ஆகிய நகரங்களை மையப்படுத்தி இந்த கும்பல் செயல்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்களில் அரசு ஆஸ்பத்திரிகள், பிளாட்பாரங்கள் போன்றவற்றில் இருந்துதான் அதிக அளவில் குழந்தைகளை இந்த கும்பலை சேர்ந்தவர்கள் கடத்துகிறார்கள். இவ்வாறு கடத்தி வரும் குழந்தைகளை தமிழகத்திற்கு ரெயில்கள் மூலம் கொண்டு வந்து, பெண் குழந்தைகள் என்றால் ரூ.4 லட்சத்திற்கும், ஆண் குழந்தைகள் என்றால் ரூ.5 லட்சத்திற்கும் விலை பேசி விற்கிறார்கள். வாங்குபவர்களை முன்கூட்டியே தேர்வு செய்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி ஓசை இல்லாமல் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு உரிய பணத்தையும் பெற்று கொள்கிறார்கள்.
தற்போது இந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை தனிப்படை போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். சேலத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 35), அவரது இரண்டாவது மனைவி நித்யா (30) ஆகியோர் கைதாகி இருக்கிறார்கள். இவர்கள் நரிகுறவ தம்பதியின் குழந்தையை கடத்தி சென்று விற்பனை செய்துள்ளனர்.
இதேபோல, சேலத்தை சேர்ந்த ஜானகி (40) என்ற பெண்ணும், அவரது தங்கை செல்வி (36) என்பவரும் கைதாகியுள்ளனர். அவர்கள் வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த பிறந்து 15 நாட்கள் ஆன பெண் குழந்தையும், 8 மாதம் ஆன பெண் குழந்தையும் மீட்கப்பட்டது. இவர்களோடு பிரவீன் (35) என்ற ஆம்புலன்சு டிரைவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவிகளாக சென்னையை சேர்ந்த சபானா, அவரது சகோதரி ரேஷ்மா மற்றும் கொடைக்கானலை சோந்த உமா மகேஷ்வரி ஆகியோர் செயல்படுகிறார்கள். இவர்களை கடத்தல் ராணிகள் என்று போலீசார் அழைக்கிறார்கள். தலைமறைவாக உள்ள இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
குழந்தைகளை கடத்தி வரும் ஏஜென்டுகளுக்கு ரூ.1 லட்சம் வரை கமிஷன் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுமாறு போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.