முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: ஜார்கண்ட் அணி முதல்முறையாக ‘சாம்பியன்’

ஜார்கண்ட்- அரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின;

Update:2025-12-19 08:00 IST

புனே,

18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டு சாம்பியன் மும்பை, 3 முறை சாம்பியனான தமிழ்நாடு உள்பட 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர் லீக் சுற்று முடிவில் ஜார்கண்ட், அரியானா அணிகள் இறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தன.

இந்த நிலையில் புனேயில் நேற்று நடந்த இறுதிஆட்டத்தில் ஜார்கண்ட்- அரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ‘டாஸ்’ ஜெயித்த அரியானா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட் செய்த ஜார்கண்ட் அணியின் தொடக்க வீரர் விராட் சிங் 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து குமார் குஷக்ரா, கேப்டன் இஷான் கிஷனுடன் கைகோர்த்தார். இருவரும் வலுவான அஸ்திவாரம் போட்டனர். அதிரடி காட்டிய இஷான் கிஷன் 45 பந்துகளில் சதத்தை ருசித்தார். முஷ்டாக் அலி தொடரில் அவர் அடித்த 5-வது சதம் இதுவாகும். இதன் மூலம் இந்த போட்டி தொடரில் அதிக சதம் அடித்த பஞ்சாப் வீரரான அபிஷேக் ஷர்மாவின் (5 சதம்) சாதனையை சமன் செய்தார்.

அடுத்த ஓவரில் இஷான் கிஷன் (101 ரன், 49 பந்து, 6 பவுண்டரி, 10 சிக்சர்) சுமித் குமார் பந்து வீச்சில் போல்டு ஆனார். அதற்கு அடுத்த ஓவரில் குமார் குஷக்ரா 81 ரன்னில் (38 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். 20 ஓவர்களில் ஜார்கண்ட் அணி 3 விக்கெட்டுக்கு 262 ரன்கள் குவித்தது. 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டிகளில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது. அனுகுல் ராய் 40 ரன்னுடனும், ராபின் மின்ஸ் 31 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

பின்னர் ஆடிய அரியானா அணி 18.3 ஓவர்களில் 193 ரன்னில் அடங்கியது. இதனால் ஜார்கண்ட் அணி 69 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஜார்கண்ட் தரப்பில் சுஷாந்த் மிஸ்ரா, பால் கிருஷ்ணா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஜார்கண்ட் கேப்டன் இஷான் கிஷான் ஆட்டநாயகன் விருதும், ஆல்-ரவுண்டர் அனுகுல் ராய் (மொத்தம் 303 ரன், 18 விக்கெட்) தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்