பாஜகவின் பி.டீம். தவெகவா? - நயினார் நாகேந்திரன் அளித்த பதில்
அதிமுகவை காப்பாற்றும் அவசியம் திமுகவுக்கு என்ன வந்தது என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.;
பாஜக சார்பில், தமிழ்நாடு முழுவதும், ‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் மரத்தடி மாமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு விவசாயிகள், பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன்விவரம் வருமாறு:-
கேள்வி:- பாஜகவின் பி.டீமாக தவெக இருப்பதாக திமுக கூறுகிறதே?
பதில்:- தவெக எங்கள் பி.டீம் என வதந்தியை பரப்புகிறார்கள். ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொல்வதும், அதைக் கடைபிடிக்கிறதும் திமுகவின் வாடிக்கை. அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து விட்டுதான் செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றார். அப்படி என்றால் தவெக, திமுகவின் பி.டீமா? என நீங்கள் தான் கேட்க வேண்டும்.
கேள்வி:- திருவண்ணாமலையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பாஜகவிடம் இருந்து அதிமுகவை முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என பேசி உள்ளாரே?
பதில்:- ஆடு நனைகிறது என்பதற்காக யாரோ கவலைப்பட்ட மாதிரி இருக்கிறது. அதிமுக - திமுக எதிர், எதிர் கட்சி, அதிமுகவை காப்பாற்றும் அவசியம் உங்களுக்கு என்ன வந்தது? எங்களை விமர்சிக்கும் திமுக 1999-ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தது. வேண்டும் என்றால் கூட்டணி வைப்பார்கள், வேண்டாம் என்றால் விமர்சிப்பார்கள். திமுக என்றைக்காவது மக்கள் செல்வாக்கோடு தொடர்ந்து ஜெயித்து உள்ளதா? அவர்கள் எப்போதும் கூட்டணியை தான் நம்பியுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.