நெல்லையில் வீடு புகுந்து நகை திருடிய சிறுமி, ஆண் நண்பருடன் கைது
போலீசார் விசாரணையில் வீடு புகுந்து நகை திருடியது 15 வயது சிறுமி என்பது தெரியவந்தது.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ராஜா (வயது 36). இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டாமல் காற்றுக்காக லேசாக திறந்து வைத்துள்ளார்.
அப்போது அவரது வீட்டுக்குள் நைசாக புகுந்த மர்மநபர், அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் நகையை திருடிச் சென்றார். மறுநாள் காலையில் ராஜா எழுந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடந்ததையும், அதில் இருந்த நகை திருடு போனதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ராஜாவின் வீ்ட்டில் திருடியது 15 வயது சிறுமி என்பது தெரிய வந்தது. மேலும் அவர் திருடிய நகையை தனது ஆண் நண்பரான மானூர் அருகே உள்ள களக்குடியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் முத்துசாமி (19) என்ற வாலிபரிடம் கொடுத்து மறைத்து வைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, நகையை மீட்டனர்.