விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரம் : அதிமுக ஆட்சியில் அதிகார அத்துமீறல்கள் எளிய மக்கள் மீது ஏவிவிடப்படுவது வாடிக்கையாகிவிட்டது கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு

விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-07-26 03:38 GMT
கோப்புக்காட்சி
சென்னை,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72). விவசாயியான இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கடையம் வனத்துறையினர் அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அணைக்கரை முத்துவின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அம்பை மாஜிஸ்திரேட்டு கார்த்திகேயன் நேற்று காலை 11.30 மணி அளவில் கடையம் சிவசைலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். சம்பவத்தன்று அந்த வனத்துறை அலுவலகத்தில் அணைக்கரை முத்துவிடம் விசாரணை மேற்கொண்ட வனச்சரகர் உள்ளிட்ட வனத்துறை ஊழியர்களை வரவழைத்து, அவர்களிடம் மாஜிஸ்திரேட்டு தனித்தனியாக விசாரித்து, வாக்குமூலத்தை பதிவு செய்தார்.மேலும், அங்கு மின்வாரிய ஊழியர்களையும் வரவழைத்து விசாரித்தார். இந்த விசாரணை இரவு வரை நீடித்தது.

இதற்கிடையே, தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் நேற்று வாகைக்குளத்தில் உள்ள அணைக்கரை முத்துவின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குடும்பத்தினருக்கு நிவாரண உதவி, அரசு வேலைவாய்ப்பும் அறிவித்துள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது அணைக்கரை முத்துவின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட வனத்துறையினர் 5 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்தால்தான், உடலை பெற்று சென்று இறுதிச்சடங்கு நடத்துவதாக தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்படாததால், உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்.பி.,கனிமொழி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டம் கடையத்தில் தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறி வனத்துறையால் அழைத்து செல்லப்பட்ட விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்திருக்கிறார்.

ஏற்கனவே, சாத்தான்குளத்தில் இரண்டு அப்பாவிகள் காவல்துறையின் அதிகார வன்முறையால் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அணைக்கரை முத்து உயிரிழப்பில் அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இச்சம்பவத்தில் வனத்துறை அதிகாரிகள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும், அதிகார அத்துமீறல்கள் எளிய மக்கள் மீது ஏவிவிடப்படுவது வாடிக்கையாகிவிட்டது என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்