பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு; 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி

8 லட்சத்து 30 ஆயிரத்து 654 மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2020-07-31 19:38 GMT
சென்னை,

பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி தொடங்கி, 26-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதிநாள் தேர்வு கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அந்த தேர்வுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்(80 சதவீதம்) மற்றும் வருகைப்பதிவு(20 சதவீதம்) அடிப்படையில் கணக்கிடப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அதன்படி, தேர்வுமுடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வை பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக 8 லட்சத்து 30 ஆயிரத்து 654 மாணவ-மாணவிகள் தேர்வுஎழுத விண்ணப்பித்து இருந்தனர். பள்ளிமாணவர்களாக தேர்வுஎழுதியவர்கள் 8 லட்சத்து 15 ஆயிரத்து 442 பேர் ஆவார்கள். இதில் மாணவர்கள் 3 லட்சத்து 79 ஆயிரத்து 561 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 881 பேரும் அடங்குவார்கள். இவர்களில் பொதுப்பாடப்பிரிவில் 7 லட்சத்து 63 ஆயிரத்து 424 பேரும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் 52 ஆயிரத்து 18 பேரும் தேர்வு எழுதினார்கள்.

தேர்வு எழுதியவர்களில் 96.04 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். அதில் மாணவிகள் 97.49 சதவீதம் பேரும், மாணவர்கள் 94.38 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 3.11 சதவீதம் அதிகம் தேர்ச்சிபெற்றுள்ளனர். கடந்தஆண்டு தேர்ச்சி சதவீதத்தை(95 சதவீதம்) ஒப்பிட்டு பார்க்கையில், இந்த ஆண்டு ஒரு சதவீதம் தேர்ச்சி அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள 7 ஆயிரத்து 249 பள்ளிகளில், 2 ஆயிரத்து 716 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று இருக்கின்றன. தேர்வு எழுதிய 2 ஆயிரத்து 819 மாற்றுத்திறனாளிகளில், 2 ஆயிரத்து 672 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டம் வாரியான தேர்ச்சி சதவீதத்தில் கோவை 98.10 சதவீதத்துடன் முதலிடத்தையும், விருதுநகர்(97.90 சதவீதம்) 2-ம் இடத்தையும், கரூர்(97.51 சதவீதம்) 3-வது இடத்தையும் பெற்றுள்ளன. பள்ளிகள் வாரியான தேர்ச்சி சதவீதத்தில், அரசு பள்ளிகள் 92.71 சதவீதமும், அரசு உதவிபெறும் பள்ளிகள் 96.95 சதவீதமும், மெட்ரிக் பள்ளிகள் 99.51 சதவீதமும் பெற்று இருக்கின்றன. அதேபோல், பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவீதத்தில், அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.33 சதவீதமும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 96.28 சதவீதமும், கலைப்பிரிவுகளில் 94.11 சதவீதமும், தொழிற்பாடப்பிரிவுகளில் 92.77 சதவீதமும் மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவ- மாணவிகள் தங்களுக்கான தேர்வு முடிவை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.

பிளஸ்-1 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-2 மறு தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்துக்கும் நேரில் சென்று தங்களது மதிப்பெண் பட்டியலை வருகிற 5-ந்தேதி முதல் 12-ந்தேதிவரை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதியவர்கள் 5-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையிலும், பிளஸ்-2 மறுதேர்வு எழுதியவர்கள் வருகிற 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

ஆரம்பத்தில், உயர்கல்வியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு, பிளஸ்-1 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் பிளஸ்-1 பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அதை அரசு ரத்துசெய்தது. இருப்பினும் பிளஸ்-1 பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறவேண்டியது அவசியம் என்று அரசு அறிவித்தது. அந்தவகையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த 3 ஆண்டுகளாக முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்