கேரள தங்க கடத்தல் விவகாரம்: என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் ரகசிய விசாரணை

கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-08-01 09:21 GMT
சென்னை, 

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தூதரக முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயன் மனைவி சௌமியா, ரமீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தங்கக் கடத்தலில் ரமீசுடன் தொடர்புடைய 5 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகின. இதையடுத்து அவரிடம் ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரில் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேரில் அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து கேரள தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதித்து என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி.ஐ.ஜி. கல்பனா தலைமையில் சென்னையில் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், 5 அதிகாரிகள் கொண்ட குழு நேற்று காலையில் இருந்து சென்னையில் ரகசிய விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்